கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி மாதம் துவக்கம் முதல் அம்மன் கோயில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிபெருக்கு அன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடப்பதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி, பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபடுவர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகேயுள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே வலசகவுண்டனூர், வேப்பனஹள்ளி அருகே தீர்த்தம், ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் வெகு விமர்சையாக கொண்டப்படுவது வழக்கம்.
அத்துடன் கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையின் சுவாமி வீதி உலாவும் நடத்தப்படும். குறிப்பாக கிருஷ்ணகிரி அணைக்கு, கிருஷ்ணகிரி மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்களான தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில் அணையின் நுழைவு வாயில் பகுதியில் டிக்கெட் பெறும் இடத்தில், சவுக்கு கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அணையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பொதுப்பணி துறையினர் செய்துள்ளனர்.