கிருஷ்ணகிரி, ஆக.2: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில், 62லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மாவட்டத்தில் சுற்றுலா தரத்தை ேமம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டல், ஓசூர் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள தங்கும் அறைகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சரயு, எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை, மருத்துவத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக விளங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நேரில் சென்று ஆய்வு செய்து, தகுந்த உத்தரவுகளை வழங்க ஆணையிட்டுள்ளார். இதன்பேரில், இதுவரை 22 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓட்டல்களில் தங்கும் அறைகள், கழிப்பறைகள், குளிர்சாதன வசதிகள், கட்டில், மெத்தை, பர்னிச்சர் பொருட்கள் விடுதிகளில் தங்கும் நபர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்களில் பணிபுரியும் சமையல் கலைஞர்களுக்கு, உணவுகளை ருசியாகவும், சுவையாகவும் சமைத்து தர பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாதம் ஒருமுறை ஓட்டல் மேலாளர்களை அழைத்து, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து, தனியார் ஓட்டல்களுக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் ஓட்டல்களில் உணவுகளை கட்டாயமாக வாழை இலையில் மட்டுமே தரப்படும். இவற்றில் மக்களுக்கு ஏதாவது குறையிருப்பின், இணையதளம் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு, தங்கும் அறைகள், வளாகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓசூரில் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில், தமிழ்நாடு சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹63 லட்சம் மதிப்பில் விடுதி அறைகள் பராமரிப்பு பணிகள், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள், உணவகம், பார் உள்ளிட்டவை சீரமைக்கப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம், சுற்றுலா துறையின் மூலம் மேம்படுத்த கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு 14லட்சம் சுற்றுலா பயணிகளும், 2021ம் ஆண்டு 16 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2022ம் ஆண்டு 20 லட்சம் சுற்றுலா பயணிகளும், இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 12லட்சம் சுற்றுலா பணிகளும் என மொத்தம் 62லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும், இம்மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை காட்சிகள் கொண்ட பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால், அப்பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் சிறப்பாக உள்ளது என கூறும் அளவிற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் ரவி, தாசில்தார்கள் சம்பத், சுப்பிரமணி, ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் வசந்தன், உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.