புதுச்சேரி, ஜூன் 20: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவர் தனக்கு கிடைத்த பென்ஷன் பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி, இணையத்தில் வந்த ஆஷ்பே என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி அதில் ரூ.93 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இதேபோல், தொடர்ந்து, 8 பேர் ஆஷ்பே கம்பெனியில் முதலீடு செய்து மொத்தமாக ரூ.2.5 கோடி பணத்தை இழந்ததாக புகார் அளித்தனர். அதன்பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், போலி கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் இயக்குனர்களான பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாட்ஷா, நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40), தாமோதரன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ேமலும் அவர்களிடமிருந்து சொகுசு கார், பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாட்ஷா ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, இவ்வழக்கில் மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆஷ்பே நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகைகள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.