தேனி, மார்ச் 13: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் கனிம வளத்துறை அதிகாரிகளின் அனுமதி சீட்டை திருத்தி போலி அனுமதி சீட்டில் கிராவல் மண்ணை கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத்பீடன் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக கிராவல் மண்ணை ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டனர்.
லாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருந்த சீட்டை திருத்தி போலி அனுமதியுடன் கிராவல் மண்ணை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, சப்.கலெக்டர் அறிவுறுத்தலின்படி, தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் அனீஸ்பாத்திமா அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார், லாரியை ஓட்டி வந்த டிரைவரான குன்னூரை சேர்ந்த பாலையா மகன் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.