சிவகங்கை, ஆக. 17: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. காளையர்கோவில் ஊராட்சி ஒன்றியம், விட்டனேரி ஊராட்சியில், ஊராட்சி தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கலெக்டர் ஆஷாஅஜித் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் 3 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 3 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தலா ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பொது விருந்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பாரதி, மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட சுகாதார அலுவலர் விஜயசந்திரன், சிவகங்கை ஆர்டிஓ விஜயகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.