மேட்டூர், அக்.29: சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மானத்தாள் நல்லகவுண்டன்பட்டி கிராமம் உள்ளது. நேற்று மாலை இங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே, மணி என்பவரது மனைவி சின்னப்பொண்ணு நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள புதரில் சிறுத்தையை பார்த்ததாக கூறி அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். இதுகுறித்து மேட்டூர் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பத்துக்கு மேற்பட்ட வனத்துறையினர், மானத்தாள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்கள் யாரும், இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, இதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சிறுத்தையை பார்த்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளார். சிறுத்தை எந்த வனப்பகுதியில் இருந்து வந்தது என்பது தெரியவில்லை. சிறுத்தை பீதி காரணமாக, நேற்று மாலை முதலே தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது.