மஞ்சூர், செப்.2: மஞ்சூர் அருகே சூறாவளி காற்றில் ராட்த மரங்கள் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. காற்றுடன் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களிலும் கடும் குளிர் வாட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துவங்கி விடிய, விடிய இடைவிடாமல் பலத்த காற்று வீசியது.
இதில் நேற்று பகல் கேரிங்டன் அருகே சாலையோரம் இருந்த இரண்டு ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர் கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிண்ணக்கொரை, இரியசீகை, கோரகுந்தா பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்றது. இதைத்தொடர்ந்து விரைந்து சென்ற நெடுஞ்சாலைதுறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் மஞ்சூர் கிண்ணக்கொரை இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.