திருப்பூர், டிச.2: திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் தீபா என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஒன்று விவசாய தோட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது. உடனடியாக இது குறித்து தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கிரேன் உதவியுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மீட்கப்பட்ட பசுமாடு வயிற்றில் கன்றுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.