செய்யாறு, ஆக.12: செய்யாறு அருகே கிணற்றில் குளிக்க வந்த சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவான்மியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் மகன் குமார்(35), ஓட்டல் டெலிவரி பாயாக பணியாற்றி வந்தார். சென்னை திருவான்மியூர் 10வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பரணிகுமார்(40), செல்போன் கடை வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் ஹரி என்பவரின் வீட்டிற்கு நேற்று காலை கூழ்வார்க்கும் விழாவிற்கு வந்திருந்தனர். பின்னர், காலை 11 மணியளவில் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள ராமன் என்பவரது வயல்வெளி கிணற்றில் குளிக்க குமார், பரணிகுமார், சிறுவர்கள் 3 பேர் என உறவினர்கள் 8 பேர் 2 கார்களில் வந்திருந்தனர்.
முதலில் குமார் கிணற்றுக்குள் குளிக்க சென்றார். அப்போது, அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதை பார்த்ததும் பரணிகுமார் நீரில் குதித்து குமாரை காப்பற்ற முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்ததும் உறவினர்கள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்க முயன்றனர். இருப்பினும் நீரில் மூழ்கியவர்களை மீட்க முடியவில்லை.
உடனடியாக தகவல் அறிந்த தூசி போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி மதியம் 2 மணி அளவில் இருவரையும் சடலங்களாக மீட்டனர். பின்னர், இருவரது சடலத்தையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்த குமாருக்கு திருமணமாகவில்லை. பரணிகுமாருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.