Wednesday, May 31, 2023
Home » கிணற்றில் பொங்கும் காசி கங்கை

கிணற்றில் பொங்கும் காசி கங்கை

by kannappan
Published: Last Updated on

* திருவிசநல்லூர் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அந்த அழகான கிராமத்திற்கு திருவிசநல்லூர் என்று பெயர். அது கார்த்திகை மாதம். அமாவாசை தினம். தர வேங்கடேச ஐயாவாள் எனும் பரம சிவபக்தர் அவரின் பெற்றோருக்கு சிரார்த்தம் செய்ய தயாரானார்.  அவர் சிரார்த்தம் செய்யும் தினமும் சேர்ந்தே வந்தது. பிராமணர்களை அழைத்தார். அவரும் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்தார். உள்ளே நுழையும்போதே, ‘‘ஐயா… பசிக்குதுங்கய்யா. சோறு போடுங்கய்யா’’ என்று வாசலில்  குரல் கேட்டது. பல நேரங்களில் இரவில் ஐயாவாள் காவிரியை கடக்கும்போது தீவட்டி பிடிப்பான்.  இன்றோ சிரார்த்தம். பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து விட்டு பிறகுதான் தானே சாப்பிட வேண்டும். ஆனால் வெளியே… ‘‘ஐயா… வந்திருக்கேங்க’’ என்று மீண்டும் குரல் கேட்டது. ஐயாவாளுக்கோ சாட்சாத் அந்த பரமசிவனே வந்து கேட்பதுபோல் இருந்தது. சிவநாமத்தை சொல்லிச் சொல்லி சிவ மயமாகவே நிற்பவர், ஐயாவாள். தான் காணுமிடங்களிலெல்லாம் சிவத்தைத் தவிர வேறெதுவும் இல்லை எனும் நிலையில் இருந்தார். சாஸ்திரமா… கருணையா… என்று வரும்போது ஞானிகள் கருணை எனும் தர்மத்தைத்தான் எடுத்துக் கொள்வார்கள். அப்படித்தான் ஐயாவாள் பசிக்கிறதே… என்று குரல் கொடுத்த நோக்கி நடந்தார். தோட்டத்திற்கு வரச் சொன்னார். அங்கிருந்த சாப்பாட்டை எடுத்து பரிமாறச் செய்தார். அவனும் உணவை உண்டு விட்டு மீதியை துண்டில் கட்டிக் கொண்டு புறப்பட்டான். வீட்டிற்குள் இருந்த பிராமணர்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் தன்னைப் பார்க்கும்போதுதான் ஐயாவாளுக்கு சுய பிரக்ஞையே வந்ததுபோல் இருந்தது. ஏதோ ஒரு உன்மத்தத்தில் செயலைச் செய்து விட்டு ஓய்ந்தவர்போல காணப்பட்டார். அவர்களை உற்றுப் பார்த்தார். இவர்கள் அனைவருமே வேதத்தின் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விதிகளை அனுஷ்டிக்கிறவர்கள். ஜீவன் செய்ய வேண்டிய சகல கர்மங்களையும் வரி பிசகாது கடைபிடிப்பவர்கள். எனவே, இவர்கள் யோசிப்பதிலும் தவறில்லை. ஆனால், மகேசனோ ஒரு நிலைக்கு மேல் தன் பக்தனை வரைமுறைக்குள் வைப்பதில்லை. அடைய வேண்டிய ஆத்மாவை அடைந்தவர்களுக்கோ அல்லது முமுட்சுக்கள் எனப்படும் தீவிரமான சாதகனையோ பரமேஸ்வரன் அவரின் இஷ்டப்பப்படிதான் நடத்துகிறான். என் விஷயத்திலும் இப்படித்தான் நடத்துகிறான் என்று உள்ளுக்குள் திடமாக இருந்தார். அதேசமயம் வந்திருந்த பிராமணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டார்.  ‘‘இதற்கு பரிகாரம் என்ன’’ என்று ஒரே கேள்வியாக நேரடியாகக் கேட்டார்.  ‘‘கங்கையில் மூழ்கி ஸ்நானம் செய்வதேயாகும்’’ மூவரும் தீர்க்கமாக ஒரே குரலில் சொன்னார்கள். ஐயாவாள் சாந்தமாக கண்களை மூடினார். இப்போது நான் என்ன செய்வது? சகல வேதங்களையும் கரைத்து குடித்தவர். ஒரு சிரார்த்தத்தின் விதி தெரியாது போலிருக்கிறதே என்று எல்லோரும் தூற்றுவார்கள். அதுகூட பரவாயில்லை. நாளைக்கு அவரே அப்படி நடந்து கொண்டு விட்டார். நாமெல்லாம் சிரார்த்தம் செய்யலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசிப்பார்களே. ஆனால், வாயிலில் முதலில் சாம்பானின் குரல் கேட்ட போது சாட்சாத் அந்த சாம்பசிவனே வந்ததுபோல் இருந்தது. பிறகு நடந்ததெல்லாம் கனவு போல இருக்கிறதே என்று சட்டென்று ஐயாவாள் அதிசூட்சுமமாக தன் பார்வையை உள்ளுக்குள் திருப்பி பரமேஸ்வரனிடம் பேசத் தொடங்கினார். பேசாமல் பேசுதல் எனும் பெரும் நிலையை அவர் அடைந்திருந்தார். ‘‘என்ன தரரே இறுதியில் இப்படி நடந்து விட்டது. இப்படி மலங்க மலங்க விழிக்கிறீர்’’ சர்வேஸ்வரன் சிரித்துக் கொண்டே கேட்டார்.‘‘உங்களின் திருநாம ஜபமே எங்கு பார்த்தாலும் உங்களையே காட்டும்படிச் செய்து விட்டது. வந்தவனுக்குள்ளும் உங்களையேதான் கண்டேன்’’ என்றார். ‘‘அப்படியெனில் வந்தவனும் ஈஸ்வரனும் ஒன்று என்று அந்த அந்தணர்களிடம் சொல்லி விட்டுப் போய்விடுங்கள். என் விஷயத்தில் இதிலொன்று தவறில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிடச் சொல்லுங்கள்’’. ‘‘நான் அப்படிச் செய்தபிறகுதான் சுய நினைவே வந்தது. இந்த சிரார்த்தத்தை ஒழுங்காக செய்தால்தானே தங்களுடைய நாம ஜபமே சித்திக்கும்’’ ‘‘அப்படியெனில் அவர்கள் சொன்னபடி கங்கைக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்’’ ‘‘இங்கிருந்து கொண்டே கங்கே… கங்கே… என்று சொன்னால் கூட போதுமல்லவா. சாஸ்திரமும் இதை அங்கீகரிக்கிறது அல்லவா’’ ‘‘கவலைப்படாதே. நீர் சொல்லும் நாமமே உன்னை காப்பாற்றும்’’ ‘‘சுவாமி. நான் அப்படியொன்றும் நாத்தழும்பேற நாமங்களை சொல்கிறேனா என்ன. நாம சித்தி எனக்கு எங்கே கிடைத்து விட்டது. உலக பிரக்ஞை இன்னும் என்னிடம் மறையவில்லையே. இரண்டுங்கெட்டானாகத்தானே இருக்கிறேன்.’’ ‘‘இந்த சிரார்த்தம் முடியவில்லையானால் பரவாயில்லை’’ ‘‘பகவானே அதுதான் உங்களின் திருவுள்ளமெனில் அப்படியே நடக்கட்டும். ஆனால், சிரார்த்தத்திற்காக நேற்றிலிருந்து உபவாசத்தோடு வந்திருக்கும் பிராமணர்கள் வேறெங்கும் சாப்பிட மாட்டார்களே.’’‘‘அப்போது நீர் கங்கைக்கு சென்று வந்தபிறகுதான் அவர்கள் சாப்பிட வேண்டுமெனில் உடனடியாக நீர் இப்போதே புறப்பட்டாக வேண்டுமே.’’‘‘பகவானே… உங்களின் நாம ஜபம் விடக் கூடாது என்பதற்காகவே இங்கிருக்கும் கிணற்றினில் குளித்து விடுவேன். காவிரிக்கு போவதில்லை. எனக்கு உங்களின் திருநாமத் தீர்த்தம் தவிர வேறு தீர்த்தங்கள் தெரியாது. அல்லது கங்கையை இப்போது நான் அழைத்தால் இங்கேயே வருவாளா என்ன. எப்போது நான் செல்வது.’’‘‘ஸ்ரீதரரே… இப்போது என்னதான் செய்யப் போகிறீர்.’’ சிவனார் இறுதியாக அவரின் நாம உறுதியை சோதித்தார். ‘‘சுவாமி நான் எதையும் செய்யப் போவதில்லை. உங்களின் திருநாமமே எனக்குக் கதி. கங்காதர… கங்காதர… கங்காதர…. என்று மட்டுமே சொல்வேன். வேறொன்றும் சொல்லத் தெரியாது’’ என்று கங்காஷ்டத்தை தன்னையும் மீறி பாடத் தொடங்கினார். அருகேயிருந்த பிராமணர்கள் அவரையே அதிர்ச்சியோடு பார்த்தார்கள். கங்கையை தலையில் சூடியவன் அன்றைய நாள் ஐயாவாளின் வீட்டிற்குள் உள்ள பத்தடியே ஆன கிணற்றுக்குள்ளிருந்து கங்கையை பொங்க வைத்தான். அந்த கங்கை ஐயாவாளின் சிவ பக்தியால் பெருகிய ஆத்ம கங்கையாவாள். பக்தனின் துயர் துடைக்க ஈசனே முறையையும் பாதைகளையும் மாற்றுகிறான். அப்படியே எங்கோ வடநாட்டில் பாய்ந்து கொண்டிருந்தவள் இந்த சிறு கிராமத்தை கண நேரத்தை அடைந்து கிணற்றிலிருந்து ஊற்றாக உயர்ந்தாள். கிணற்றுப் பக்கம் எதோ பேரருவியின் சத்தம் கேட்பது போல இருந்தது. பிராமணர்கள் ஓடிச் சென்று பார்த்து ஆனந்தப்பட்டனர். கங்கையானவள் கூடம், தாழ்வாரம், திண்ணை, தெரு என்று பாய்ந்தோடியது. ஆதியில், ஈசனுக்கு கட்டுப்பட்டவள் இப்போது பக்தனுக்காக ஆனந்தமாக அந்த கிராமத்தை மூழ்கி விடத் துடித்தாள். சிலருக்கு ஏதோ ஊற்று போல இருந்தது. பக்கத்திலுள்ளவர்கள் கங்கையிலுள்ள முதலைகளும், ஆமைகளும் ஊறுகின்றன என்றவுடன் பயந்துபோய் ஒதுங்கினர். நேரேயே பார்த்து அதிர்ந்தனர். ஞானம் எவ்விடத்தில் பொங்குமோ அங்கே ஞான கங்கையும் சேர்ந்தே இருக்கிறாள். ஞான கங்கா இதுவரையில் ஐயாவாளின் அகத்தில் ஓடிக் கொண்டிருந்தாள். அவரை எப்போதும் குளிர்வித்தபடி இருந்தாள். இன்று எல்லோரையும் சுத்தப்படுத்துவதற்காக புறத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறாள். ஞானியும் கங்கையும் ஒன்றுதான். அவர்கள் இருவரும் சேர்ந்தே இருப்பர். ஞானியர் தொட்ட தீர்த்தம் கங்கையாகும். அவர்கள் இருக்குமிடமே காசி. அவர்களோடு வாழ்வதே க்ஷேத்ர வாசம். அவனே தலம். அவனே தீர்த்தம் என்பதை ஸ்ரீதர ஐயாவாளின் சரிதம் அழகாகக் கூறுகிறது. அதி ஆச்சரியமாக சதாசிவ பிரம்மேந்திரரும் இந்த நிகழ்வைக் நேரேயே கண்டு ஆச்சரியமுற்று ஆனந்தக் கூத்தாடி பாட ஆரம்பித்து விட்டார். ஏனெனில், சதாசிவ பிரம்மேந்திரர் வேறொரு தீர்த்தத்தையோ புண்ணிய தலத்தையோ வர்ணித்தவரல்லர். ஆனால், அலைபுரண்டு இந்த கிணற்றிலிருந்து வரும் கங்கையை கீர்த்தனம் பாடி துதித்தார். ஸ்ரீதர ஐயாவாளின் பிரபாவமும் உயர்ந்த நிலையையும் அறிந்தவராகவும் இருந்தார். ஞானியை ஞானியே அறிவர். ஆனால், ஞானிகளை பரம்பொருள் எல்லோருக்கும் அடையாளங்காட்டி அவரின் திருப்பாதத்தில் கொண்டு சேர்க்கிறது. சாதாரணமாக குரு பரம்பொருளை காட்டுப்பார். அதேசமயம் இவரே குரு என்று பரம்பொருள் அவர்களை சுட்டிக் காட்டும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று (26 – 11 – 2019) திருவிசநல்லூர் ஐயாவாள் மடத்திலும் நிகழ்கிறது, ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று நாமும் நீராடுவோமாக. * கிருஷ்ணா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi