நன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் மனசுகிசுகிசு என்ற வார்த்தையை கேட்டாலே உடனடியாக பலருக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ளும். நாளிதழ்களில் கூட செய்தியை விடவும் கிசுகிசு பக்கங்களை தேடி படிப்பவர்கள் தான் அதிகம். அடுத்தவர்களை பற்றி பேசுவதில் அப்படி என்ன ஒரு அலாதி சுகம்? அப்படி என்ன தான் இருக்கிறது கிசுகிசு பேசுவதில்? ஏன் இப்படி மனிதர்கள் எந்நேரமும் அடுத்தவர்களை பற்றி கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறார்கள்? இதை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றியெல்லாம் நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.‘‘கிசுகிசு கேட்க பொதுவாக எல்லாருக்குமே ஆர்வம் இருக்கும். காரணம் அதன் சுவாரஸ்யம். பேச்சுக்கு சுவாரஸ்யம் கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் கிசுகிசு. செய்திகளை கேட்கும்போதோ, படிக்கும்போதோ அது கிசுகிசு அளவிற்கு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. காரணம் அதன் வெளிப்படைத்தன்மை. ஆனால், கிசுகிசுவை பொறுத்தமட்டில் செய்திகளில் உள்ள அளவிற்கு நம்பகத்தன்மை அதில் இருக்காது. கிசுகிசுக்களில் நம்பகத்தன்மை குறைவுதான் என்றாலும் மனிதர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ஒரு விஷயமாக கிசுகிசு இருக்கிறது என்பதுதான் உண்மை.ஒருவரை பற்றி குறையாகவோ, மோசமாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசுவதற்குதான் கிசுகிசுவை அதிகம் பயன்படுத்துகிறோம். ஒருவரைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தை பேச வேண்டும் என்றால் அந்த செய்தி உண்மையாக இல்லையென்ற போதிலும் தைரியமாக வெளிப்படையாக பேசிவிடுவோம். ஒருவரைப் பற்றி மட்டம் தட்டி பேச நினைக்கும்போது கிசுகிசுப்பதுண்டு. கிசுகிசு வேகமாக பரவும் அளவிற்கு செய்தி பரவாது. காரணம் கிசுகிசுவின் மீதான மக்களின் ஆர்வம்தான் முக்கியக் காரணம்.பெரும்பாலானோர் சும்மா டைம் பாஸுக்காக கிசுகிசு பேசுகிறார்கள். ‘இந்த நடிகர். அந்த நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டார்’ என்பது மாதிரியான நடிகர் நடிகையரைப் பற்றி படிக்கும் கிசுகிசு ஒரு சிறு குதூகலத்தைக் கொடுப்பது போல, ‘ஏய்… அவன் அன்னிக்கு என்ன பண்ணான் தெரியுமா?’ என அலுவலகத்தில் உள்ளவர்கள் பற்றியோ, அக்கம் பக்கம் உள்ளவர்கள் பற்றியோ கிசுகிசு பேசுவது என்பது ஒரு சிறு சந்தோஷம்.வேலை நெருக்கடிகளின் அழுத்தத்தைக் குறைக்க, மனதை தளர்த்திக் கொள்ள மனிதர்கள் ஈடுபடும் சிறு செயல் அது. சுவாரஸ்யமான பேச்சு மூலம் நண்பர்களை சம்பாதிக்க ஒரு சிலர் பயன்படுத்தும் டெக்னிக் என்று கூட சொல்லலாம். கிசுகிசு பேசும் பழக்கம் என்பது மனிதன் தோன்றிய காலம் தொட்டே ஆண்டாண்டு காலமாய் நம் மரபணுக்களிலேயே ஊறிக் கிடக்கிறது.எல்லோரும் எந்நேரமும் கிசுகிசு பேசுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும்தான் பேசுவார்கள். பொதுவாக கிசுகிசுவை உருவாக்குபவர்களாக அவர்கள் இருப்பார்கள். அது அவர்களுடைய குணாதிசயம். எந்நேரமும் மற்றவர்களை பற்றி குறை சொல்வது என்பதுஅவர்களின் தனிப்பட்ட பழக்கம்.அப்படிப்பட்டவர்கள் ஆரம்பித்து வைத்த சில விஷயங்களை, கேட்கும் பொதுவான மற்ற சிலரும் ஆர்வக் கோளாறு காரணமாக சில நேரங்களில் மற்றவருக்கு பரப்புவர். இதை தாண்டி போக நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நம் காதுக்கு வரும் விஷயத்தை தமக்குள்ளே வைத்துக் கொண்டோர் எத்தனை பேர்? நாமும் நம் வாழ்வில் ஒரு முறையேனும் கிசுகிசு என்ற ஒன்றை கட்டாயம் பேசி இருப்போம். ஆண், பெண் பேதமின்றி எல்லாரும் கிசுகிசு பேசுபவர்களாக இருக்கிறோம்.இதில் ஒரு விஷயத்தை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிசுகிசு என்பது வேறு. அவதூறு என்பது வேறு. கிசுகிசு என்பது தனிப்பட்ட ஒருவரின் மீது இருக்கும் வெறுப்பு அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பரப்பப்படுவது அல்ல. அதன் நோக்கம் வெறும் சுவாரஸ்யம் மட்டுமே. ஆனால், குறிப்பிட்ட தனிப்பட்ட மனிதரின் மீதான வெறுப்பு, பொறாமை அல்லது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பரப்பப்படுவது அவதூறு.தெளிவான நோக்கத்தோடு திட்டமிட்டு பரப்பப்படுவது அவதூறு. தன்னுடைய சுயநலத்துக்காக அடுத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் அவதூறு. பொதுவாக தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் இத்தகைய அவதூறுகளை பரப்புபவர்களாக இருக்கிறார்கள். தம்மை விட உயர்ந்தவர்களை பற்றித்தான் அவர்கள் அவதூறு பேசுவார்கள். தம்மை விட உயர்ந்தவர்களை ‘அவன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை’, ‘அவனும் என்னைப் போல் சாதாரண மனிதன்தான்’ என்று மற்றவர்களுக்கு பொய்யாக உணர்த்த அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி அது. மேலே உயர்ந்தவனை தன்னுடைய உயரத்துக்குக் கீழே இழுக்கும் செயல் அது.இதை இன்னொரு கோணத்திலும் விளக்கலாம். தன்னை விட சில விஷயங்களில் உயர்ந்து இருப்பவர்களின் மகிழ்ச்சியை இப்படி சூதாடுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். இது ஒருவகையான உளவியல். தன் தாழ்வுணர்ச்சியை ஈடு செய்ய அவர்கள் செய்யும் செயல். அது அவர்களின் ஒருவகையான பலவீனம்தான். ஆனால், அந்த பலவீனம் பாதிப்பது என்னவோ மற்றவர்களைத்தான்.கிசுகிசு பரப்புபவர்களையோ, அவதூறு பரப்புபவர்களையோ நம்மால் கட்டாயம் திருத்த முடியாது. தனிப்பட்ட மனிதர்களின் ஆளுமையை நம்மால் மாற்ற முடியாது. நான் இப்படி செய்கிறேன். என்னை நல்வழிக்கு கொண்டு வாருங்கள் என்று அவர்களும் நம்மிடம் வரப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் பரப்பும் கிசுகிசுவாலோ, அவதூறாலோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேரப்போவதில்லை.அதனால் அவர்களை திருத்துவது என்பது நமக்கு அவசியமற்ற செயல். அது பயனற்றது. அதற்கு பதில் அவர்கள் பரப்பும் அந்த கிசுகிசுக்களையோ, அவதூறுகளையோ செவிமடுப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டும். இன்னொருவரைப் பற்றி பரப்பப்படும் ஒரு தகவல் அது உண்மையான செய்தியோ அல்லது பொய்யான செய்தியோ அது அடுத்தவரின் வாழ்வை பாதிக்கும் என்ற பட்சத்தில் அதனை பரப்பாமல் தடுப்பது நம் பொறுப்பு.கிசுகிசு சொல்லப்படும் நபரின் இடத்தில் நம்மை வைத்து பார்க்க வேண்டும். இப்படி ஒரு கிசுகிசு அல்லது அவதூறு நம் மீது பரப்பப்பட்டால் நாம் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகுவோமோ, அதே அளவு அவர்களும் அத்தகைய துன்பம் கொள்ள நேரும் என்று புரிந்து நடக்க வேண்டும். இந்த கிசுகிசுவை பரப்பும் மனிதர் நாளை உங்கள் மீதும் இப்படி ஒரு தாக்குதலை நடத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்.அதனால் அத்தகைய தகவல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நம் தற்காலிக மகிழ்ச்சி அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடிவிடக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.’’– சக்தி
கிசுகிசு பேசுகிறவர்களின் உளவியல் தெரியுமா?!
87
previous post