பெரம்பலூர், ஆக. 4: ஆடிப் பெருக்கையொட்டி, திருச்சி காவிரி அம்மா மண்டபத்திலிருந்து 60 கி.மீ., தூரம் தலைக் காவிரி நீரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தலையில் சுமந்து வந்து, பெரம்பலூர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். பெரம்பலூர் நகரத்தில் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலமாகக் கருதப்படும், மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபால சாமி கோயிலில் 40 அடி உயரமுள்ள கல்தூணில் கலைநடத்துடன் கம்பத்து ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பெரம்பலூர் இளைஞர்கள் நூறுபேர், கடந்த 2ம் தேதி இரவு 10 மணியளவில் திருச்சி அம்மா மண்டபம் காவிரியிலிருந்து குடங்களில் புனித நீரை நிரப்பி, காவிரித் தாய்க்கு படையலிட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நடைபயணமாக திருச்சிமாவட்டம், எதுமலை; பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம், சத்திரமனை வழியாக, மாலை 4 மணிக்கு சிறுவாச்சூருக்கு வந்தனர். அங்கு, இளைப்பாரிவிட்டு, பின்னர் புறப்பட்டு பெரம்பலூர் தெற்கே உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் அருகே வரும்போது, தண்ணீர் சுமந்து வருவோரை, முக்கியஸ்தர்கள், உறவினர்கள் மேள தளங்களுடன் வரவேற்று, பெரிய தெற்கு தெரு, கடைவீதி, சஞ்சீவி ராயன் கோவில் தெரு வழியாக, பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர், மாலை 6 மணியளவில் அங்குள்ள கம்பத்து ஆஞ்ச நேயருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வு, பாரம்பரியமாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
காவிரி புனித நீரால் கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
previous post