விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் மாவட்டத்தில் டிஜிபி உத்தரவு எதிரொலியாக எஸ்பி, டிஎஸ்பி வசம் செயல்பட்டு வந்த 6 தனிப்படைகள் கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல்போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளியை போலீசார் அடித்து கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் எதிரொலியாக தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் எஸ்.பி மற்றும் டிஎஸ்பி வசம் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 6 தனிப்படைகளை கலைத்து எஸ்.பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட எஸ்பி தலைமையில் ஒரு தனிப்படையையும், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம்,ஆகிய 5 காவல் உட்கோட்ட அளவில் என மொத்தம் 6 தனிப்படைகள் எஸ்ஐ தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை டிஜிபி கலைக்க உத்தரவிட்டதன்பேரில் நேற்று எஸ்பி சரவணன் தனிப் படைகளை கலைத்து அதிலிருந்த எஸ்ஐக்கள், போலீசார்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி, மணல், சாராயம் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களை ரகசியமாக கண்காணித்தும், குற்றவாளிகளை கைது செய்து இந்த தனிப்படை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.