தூத்துக்குடி, மே 31:தூத்துக்குடி மாவட்ட காவல் துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் மாணவர்களுக்கு கைப்பந்து விளையாட்டு பயிற்சி நடைபெற்றது. முதலமைச்சரின் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நன்கு பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்கள் மூலம் இப்பயிற்சி நடைபெறுகிறது. முதற்கட்டமாக தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகர் மற்றும் பிரையண்ட் நகர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியளிக்கும் போலீசார், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.