அன்னூர், ஆக.22: கோவை அடுத்துள்ள கோவில்பாளையம் அருகே கீரணத்தம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (35). இவர் கோவை மாநகராட்சியில் 22வது வார்டில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா (34) இவர் கோவை மாநகராட்சியில் 9வது வார்டில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். கோவை விளாங்குறிச்சி, தனலட்சுமி நகர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பவுண்டரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் விளாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் சுப்பிரமணி டீ குடிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் அங்கு டீ குடிக்க சென்ற வேலுச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. வேலுச்சாமி, சுப்பிரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து, நெஞ்சு, தாடை, காது பகுதியில் சரமாரியாக குத்தினார். பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது வேலுச்சாமி தப்பி ஓடி தலைமறைவானார். இது குறித்த தகவல் அறிந்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுப்பிரமணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான வேலுச்சாமியை கண்டுபிடித்து கைது செய்த ேபாலீசார், அவரிடம் விசாரித்த போது, சுப்பிரமணியிடம், தனது மனைவி சந்தியாவுடன் பேச வேண்டாம் என நேற்று முன்தினம் எச்சரிக்க சென்றதாகவும், அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் தனது மனைவியுடன் சுப்பிரமணி பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கத்தியால் குத்தினேன் என வேலுச்சாமி வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து வேலுச்சாமியை கைது செய்த கோவில்பாளையம் போலீசார், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.