கோத்தகிரி, ஜூன் 25: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து கரடிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளன. அவ்வாறு உலா வரும் கரடிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதோடு, சில நேரங்களில் பொதுமக்களை துரத்தி தாக்கவும் முயற்சிக்கிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் கோத்தகிரி நகர பகுதியை ஒட்டி அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பெரிய உருவம் கொண்ட கரடி எவ்வித அச்சமும் இன்றி உணவு தேடி உலா வந்துள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இந்த சிசிடிவி கேமரா பதிவால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அடிக்கடி கரடி உலா வருவதால் பொதுமக்கள் நலன் கருதி உடனே கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.