சிவகங்கை, ஜூலை 8: கடந்த சில ஆண்டுகளில், சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கி மனிதர்கள், கால்நடைகள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மே மாதம் சிவகங்கை அருகே திருவேலங்குடியில் 6 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன. ஏராளமானோரின் வீடுகளில் டிவி, இன்வெர்ட்டர், ஏசி, பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின. இந்நிலையில் தற்போதைய மழையிலும் பயங்கர சத்தத்துடனான இடி மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் காளையார்கோவில், சிவகங்கை பகுதிகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகின. மழையையொட்டி இரவு நேரங்களில் டிரான்ஸ்பார்கள் மற்றும் இன்சுலேட்டர்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களில் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 62.4 மி.மீ மழை பெய்தது. தேவகோட்டையில் 45.4 மி.மீ, சிவகங்கையில் 28.6 மி.மீ, காரைக்குடியில் 14.5 மி.மீ, மானாமதுரையில் 7 மி.மீ மழை பெய்தது.