மல்லசமுத்திரம்: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்தினர். பெண்கள் கோயில் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செல்வகுமார், செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.