பாப்பாரப்பட்டி, அக்.20: பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தில், காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக திட்டம் மூலம், காளான் விதை மற்றும் காளான் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதில் 100 பட்டியிலின வகுப்பை சார்ந்த விவசாயிகளுக்கு கலந்து கொண்டனர். பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி காளான் வளர்ப்பின் மூலம், செங்குத்து இடத்தையும் பயனுள்ளதாக உபயோகித்து குறுகிய காலத்தில் புரத சத்துள்ள உணவு உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்க முடியும் என்பதை கூறினார்.
பயிர் நோயியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கார்த்திகேயன், காளான் வளர்ப்பில் உயர் தோட்டக்கலை தொழில் நுட்பம் மூலம், பண்ணை கழிவுகளை உணவாக மாற்ற இயலும் என்பதையும் மற்றும் இதன் மூலம் புரத சத்துள்ள உணவு உற்பத்தி செய்வதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்க முடியும் என்பதை விளக்கினார். காளான் திட்டத்தின் செயல் அதிகாரி திரிபுவனமாலா, விரிவான திறன்சார்ந்த செயல் விளக்கங்களோடு காளான் விதை மற்றும் சிப்பிக் காளான் வளர்ப்பு முறைகள், விவசாயிகள் காளான் உற்பத்தியை 2ம் நிலை வேளாண்மை தொழிலாக மேற்கொண்டால் வருமானத்தை இரட்டிப்பாக ஈட்ட முடியும் என்பதை எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் தெய்வமணி காளான்களில் தோன்றும் நோய்கள் மற்றும் அதன் மேலாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் குறித்து கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும், காளான் வளர்ப்பிற்கு தேவையான விலையில்லா இடுபொருட்கள் வழங்கப்பட்டது.