அன்னூர், ஆக. 3: கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் காளப்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் இயற்கை இடுபொருள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றி ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சர்க்கார் சாமகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் நாமதுல்லா வரவேற்று பேசுகையில்,“மண்வளம் பெருக மண்ணில் உள்ள தழை சத்து, மணிசத்து போன்ற சத்துக்களை தாவரங்களுக்கு எடுத்து தர அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற திரவ உயிரி உரம் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை துறை வழங்கி வருகிறது’’ என்றார். வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் புனிதா பேசுகையில்,“முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த உர மேலாண்மை வழியாக ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்தல், மண் பலம் அட்டை வழங்குதல். வேளாண் காடுகளை ஊக்குவித்தல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், பாரம்பரிய ரகங்களை பாதுகாத்தல் வேளாண் பயிர்களுக்கு திரவ உயிரி உரம் வழங்குதல். மாணவரி சாகுபடி மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுகின்றது’’ என்றார்.
பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க மாவட்ட ஆலோசகர் மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர் லட்சுமண பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் வேலுசாமி நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை அட்மா அலுவலர்கள் மேற்கொண்டனர். IMG_20240802_192752 காளப்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் இயற்கை இடுபொருள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.