போச்சம்பள்ளி, செப்.4: போச்சம்பள்ளி அருகே கால்வாயில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி வசந்தா (45). இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், புனிதவள்ளி என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வசந்தா அதேபகுதியில் உள்ள செல்லம்பட்டி கால்வாய் ஏரிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தார். கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன், சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் வீரர்கள், கால்வாயில் விழுந்த வசந்தாவை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை விளங்காமுடி என்ற இடத்தில், முட்புதருக்குள் சிக்கிய நிலையில் வசந்தா சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்வாயில் விழுந்த பெண் சடலமாக மீட்பு
previous post