திண்டுக்கல், மே 20: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தமிழக கால்பந்து நடுவர்களுக்கான தேர்வு பயிற்சி முகாம் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 71 நடுவர்கள் கலந்து கொண்டனர். முதல் இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சியும், மூன்றாவது நாள் உடற் தகுதிக்கான தேர்வு நடந்தது. இதற்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
அகில இந்திய கால்பந்து நடுவர்கள் சங்க தலைவர் சங்கர், தமிழ்நாடு கால்பந்து நடுவர்கள் சங்க ஆய்வாளர் ரமேஷ்பாபு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஆரோக்கியதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து நடுவர்கள் சங்க கன்வீனர்கள் அருண், ஜெயக்குமார், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி இயக்குனர் டேமியன் ராபர்ட் குமார் செய்திருந்தனர்.