சேலம், ஆக. 17:சேலம் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 4 மாதத்தில் 8,432 விவசாயிகளுக்கு ₹33.74 கோடி கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் முதல் முறையாக ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த 4 மாத்தில் 23ஆயிரம் பேருக்கு ₹197.50 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 4 மாதத்தில் கால்நடை பராமரிப்பு கடனாக 8,432 விவசாயிகளுக்கு ₹33.74 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ₹14,000மும், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ₹2 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு இந்த 2 திட்டத்திலும் வட்டியில்லாமல் கடன் வழங்கி அந்த வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்தி வருகிறது. மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ₹110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெறலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம். இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூட்டுறவு துறை மூலம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ₹783.45 கோடி பயிர்க்கடனும், 24,195 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடனாக ₹98.74 கோடி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 4 மாதத்தில் 23 ஆயிரம் விவசாயிகளுக்கு ₹197.50 கோடி பயிர்கடனும், 8432 விவசாயிகளுக்கு ₹33.74 கோடி கால்நடை பராமரிப்பு கடனும் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு அதிகளவு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, அந்தந்த கடனுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.