மதுரை, நவ.8: மதுரை மாவட்டத்தில் கால்நடை துறை சார்பில் கால்நடைகளுக்கான 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் சிலைமான் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சாமநத்தம் கிராமத்தில் நடந்த மருத்துவ முகாமை கால்நடை பராமரிப்பு துறை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் துவக்கி வைத்தார். மதுரை மண்டல உதவி இயக்குநர் பழனிவேலு, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா முன்னிலை வகித்தனர். சிலைமான் கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் ஆமினா, ஆறுமுகம் தலைமையில் கால்நடை ஆய்வாளர் சசிரேகா, ஜமுனாராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் இந்திரா ஆகியோர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.
முகாமில் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான 55 குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் மூலம் சுமார் 2 லட்சத்து 8 ஆயிரத்து 50 மாடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாடுகளுக்கு தடுப்பூசி போட்டு, கோமாரி நோயிலிருந்து தங்களது மாடுகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கால்நடை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.