பாடாலூர், செப்.2: முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். தமிழ்நாட்டில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி காலை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை முன்னிட்டு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி மூலமாக 449 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செட்டிகுளம் மட்டுமின்றி நாட்டார்மங்கலம், பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், தம்பிரான்பட்டி என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் வாகனங்களில் இந்த பள்ளிக்கு கல்வி பயில வந்து செல்கின்றனர். காலை உணவு திட்ட மூலம் இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயன் பெறுகின்றனர். காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த பள்ளியானது தொடக்கப் பள்ளி அளவில் மாணவர்கள் அதிகமாக படிக்கும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.