நிலக்கோட்டை, செப்.2: காலை உணவு திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் செல்வராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் கலியமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் ஏழை எளிய தொழிலாளர்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி நூறு சதவீதம் கல்வியை கற்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தும், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கலைஞரின் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் சாலை உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேம்படுத்த சிறப்புநிதி ஒதுக்கிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், துறை பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஆய்வாளர் கணேசன் நன்றி கூறினார்.