திருவண்ணாமலை, செப்.13: திருவண்ணாமலை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். மேலும் சூடாகவும், சுவையாகவும் வழங்க வலியுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், மொத்தம் 1581 ெதாடக்கப் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் 88,988 மாணவ- மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர். காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைக்கும் பணியில், மகளிர் குழுக்களைச் சேர்ந்த 2,270 பேர் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், சுகாதாரமான முறையில், சுவையாகவும், சூடாகவும், மாணவர்கள் விரும்பும் வகையில் காலை உணவு வழங்கப்படுவதால், மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் நேற்று காலை உணவு திட்டத்தை கலெக்டர் முருகேஷ் ஆய்வு நடத்தினார். அப்போது, மாணவர்களுக்கு காலை உணவை கலெக்டர் பரிமாறினார். மேலும், மாணவர்கள் விரும்பும் சுவையில் காலை உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதோடு, காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு தினமும் முன்கூட்டியே வர வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், சமையல் கூடம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார். சமையல் கூடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது, மகளிர் திட்ட அலுவலர் சையத்சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாச்சலம், பிரத்திவிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.