சங்கராபுரம், செப். 5: சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரமநத்தம் ஊராட்சியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற அதிகாரிகள் கூறுகையில், சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை பணி விரைந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிக்கப்பட்டவுடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உடனடியாக இணைக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும் அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.