பழநி, ஆக. 19: பழநி அருகே தொப்பம்பட்டி வட்டாரத்தில் ஏராளமான தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் செயல்பட வேண்டிய விதங்கள் குறித்து தொப்பம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் காளிமுத்து கூறியதாவது: தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை மையங்களில் இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு உரிய முறையில் ரசீது வழங்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட அல்லது காலாவதியான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை உரிமங்கள் விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு கடையில் வைக்க வேண்டும். விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக்கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.