நன்றி குங்குமம் டாக்டர் கழுத்து தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட சிலர் காலர் பெல்ட் அணிந்துகொள்வதைப் பார்க்கிறோம். இதனால் என்ன நன்மை. பெல்ட் அணிவது அவசியம்தானா என்று எலும்பு முறிவு மருத்துவர் விவேக்கிடம் கேட்டோம்… ‘‘பொதுவாக மருத்துவர்கள் யாரும் தங்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் கழுத்தில் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்று எந்தக் காரணத்துக்காகவும் பரிந்துரை செய்வது கிடையாது. பொதுமக்கள் அவர்களாகவே, தேவைப்படும் சமயத்தில் வாங்கி அணிந்து கொள்ளுகிறார்கள். நெக் பெல்ட் உபயோகிப்பதால், எந்தவிதமான பயனும் யாருக்கும் கிடைப்பது இல்லை.; ஒருவர் காலர் பெல்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் பிரச்னைகள்தான் அதிகமாகும். இந்த உபகரணத்தைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், கழுத்தில் உள்ள தசை பலம் மெல்லமெல்ல குறைந்து விடும். நாளடைவில் கழுத்து பெல்ட் அணியாமல் இவர்களால் இருக்க முடியாது. அது மட்டுமில்லாமல், ஒருவிதமான சிரமத்துக்கு ஆளானது போல உணர்வார்கள். இதனால், தொடர்ந்து பெல்ட்டைப் பயன்படுத்த தொடங்குவார்கள். இதனால், தசைபலம் குறைதல் மேலும்மேலும் அதிகரிக்கும். எனவே, கழுத்தில் பெல்ட்டைத் தொடர்ந்து அணிவது சரியானது கிடையாது. ஒரு சிலருக்குக் கழுத்தில் தசை பிடிப்பு ஏற்படும். இப்பாதிப்பு 5 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும். அந்தச் சமயத்தில் இதனை உபயோகப்படுத்தலாம். ஆனால், எல்லோருக்கும் இந்த மருத்துவ உபகரணம் பயன் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், குறைவான நபர்கள்தான் இதனால் பயன் அடைகின்றனர். அப்படி பயன்படுத்தினால் சௌகரியமாக இருக்கிறது என்று உணர்பவர்கள் அதிகபட்சமாக, 20 நாட்கள் வரை இதனைப் பயன்படுத்தலாம். அதற்குமேல், உபயோகப்படுத்தும் சூழல் வந்தால் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, கழுத்து வலிக்காக, இதைப் போட்டுக் கொள்வார்கள். கழுத்தின் உள்ளே தசைப்பிடிப்பு (Muscle Spasm) வரும். இது இளம் வயதினர், நடுத்தர வயதினர் மற்றும் முதுமைப் பருவத்தினர் என அனைவருக்கும் உண்டாகும். தசைப் பிடிப்பு எளிதில் குணப்படுத்தக்கூடிய சிறு பிரச்னைதான். சிலருக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனைக் கட்டுப்படுத்த பெல்ட் யூஸ் பண்ணலாம். அந்தச் சமயத்தில் வேண்டுமானால், நமக்குச் செளகரியமாக இருக்கும். ஆனால், வலி குறைந்த; உடன் பெல்ட் போட்டுக்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல், பெல்ட் பயன்படுத்துவதைத் தொடர்ந்தால், தசை பலம் குறைந்து, எல்லா பிரச்னைகளும் எலும்பை அடையும். ஆகவே, எலும்பு தேய்ந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.தூங்கும் நேரங்களில், வயதானவர்களில் சிலருக்கு நெக் பெல்ட்டைப் போட்டுக்கொண்டு தூங்கும் வழக்கமும் இருக்கிறது. இதுவும் நல்லதல்ல. ஏனென்றால், அந்தச் சமயத்தில், கழுத்து தசைகள் எல்லாம் தளர்வாக காணப்படும். அப்போது, கழுத்தில் பெல்ட் அணிவதால், ரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு, ரத்த ஓட்டம்; தடைபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்குக் கழுத்து சிறியதாக இருக்கும். அவர்களுக்குச் சுவாசக் கோளாறு இருந்தால், அப்பிரச்னை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஆரம்பத்தில் கூறியதைப்போன்று, காலர் பெல்ட் என்பது பிரச்னைக்கு சரியான சிகிச்சை கிடையாது.அது ஒரு தற்காலிக நிவாரணம்தான். அதுவும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் தீர்வாக இருக்கும். கழுத்தில் ஏதேனும் பிரச்னை இருப்பது தெரிய வந்தால், உடனடியாக டாக்டரிடம் செல்வது நல்லது. அவரின் ஆலோசனைப்படி, சின்னசின்ன Neck Exercise பண்ணாலே போதுமானது. கழுத்தின் உள்ளே இருக்கும் பெல்ட் வலிமை பெறும். வெளியே பெல்ட் அணிய வேண்டிய தேவை இருக்காது’’. – விஜயகுமார்
காலர் பெல்ட் அவசியம் இல்லை!
previous post