வேலாயுதம் பாளையம் ஜூலை 2: கரூர்மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் கரூர் வனக்கோட்டம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இயற்கை முகாம் நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் மற்றும் கரூர் வனக்கோட்டம் சார்பில் 10 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கோடை கால சிறப்பு இயற்கை முகாம் வனத்துறை மூலம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் தேவாங்கு சரணாலயம், பொன்னனியார் அணை, நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் மாணவர்களுக்கு காடுகள் பாதுகாப்பு, உயிர்பன்மயம், இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இதில் மாணவர்களுக்கு வினாடி ,வினா போட்டி, ஓவியம் வரைதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், முகாம் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனவர் கோபிநாத், முதலமைச்சரின் பசுமை தோழர் கோபால், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, வனத்துறை களப்பணியாளர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.