கோவை, ஜூலை 6 : கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் கிராமத்தில் கொடிசியா தொழில் பூங்கா, சுமார் 120 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு முதல்கட்டமாக 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் ஆயிரம் பேர் பணி புரிந்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு வெளியே ஓராட்டுக்குப்பை பகுதியில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் சில தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.
இதன் காரணமாக ஏற்படும் புகை போன்றவற்றால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளது. இந்த நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கொடிசியா சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.