தர்மபுரி, ஆக.12: தர்மபுரி அருகே குள்ளனூரில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் பெய்த கனமழையில், 5 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர் சேதமானது. தர்மபுரி குள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(83). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக விதை நெல் சாகுபடி செய்து, அரசுக்கு விதை நெல் வழங்கி வருகிறார். இவர் கடந்த 2018-2019ம் ஆண்டு மாநில அளவில் அதிக நெல் விளைச்சலுக்கான முதல் பரிசு ₹5லட்சத்தை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பெற்றார். தற்போது, முனுசாமி தனது விவசாய நிலத்தில் சீரக சம்பா விதை நெல் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில், பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த காற்றும், மழைக்கும் நெல் பயிர்கள் வயலில் சரிந்து விழுந்தன. மேலும், நெல் மணிகள் வயலில் கொட்டியது. இதனால் முனுசாமிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த முனுசாமி கூறுகையில், ‘ஆசிரியராக பணியாற்றும் போதே, விவசாய பணிகள் மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக அரசுக்கு நெல் விதைகள் உற்பத்தி செய்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறேன். ஒரு ஏக்கருக்கு 4 டன் விதை நெல் அறுவடை செய்யப்படும். தற்போது கடந்த 2 நாட்களாக பெய்துள்ள மழையால், நெல் பயிர் சாய்ந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ஏக்கரில் நெல் மணிகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. வயலுக்குள் மட்டும் சுமார் 2 டன் நெல் மணிகள் உதிர்ந்துள்ளன. இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றார்.