சத்தியமங்கலம்,மே31: பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பலத்த சூறைக்காற்று வீசியதோடு கனமழை பெய்தது. அப்போது அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததோடு டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கு மின் துண்டிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ராஜன் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஒரு வாரமாகியும் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் மின் துண்டிப்பை சரி செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மின்விநியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.