புதுச்சேரி, செப். 1: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ரங்கசாமி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் காலதாமதம் செய்து வருகிறார். உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு முன்பு மின் கட்டண உயர்வை மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. அப்போது, முதல்வரும், மின்துறை அமைச்சரும் மின் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். ஆனால், திடீரென்று மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி, மின்துறை மூலமாக மின் கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முதல்வர், மின்துறை அமைச்சரின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் அறிவித்துள்ளோம்.
முதல்வரும், மின்துறை அமைச்சரும் மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கமாட்டார்கள் என்று சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார். ஆனால், நீதிமன்றத்தில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும் என்று புதுவை அரசு கேட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு ஒரு தில்லுமுல்லு அரசு. இவர்கள் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று. புதுச்சேரி நிர்வாகம் முதல்வர், அமைச்சர்கள் கையில் இல்லை. அதிகாரிகளின் கையில் இருப்பது தெரிகிறது. என்ஆர் காங்கிரஸ் – பாஜ கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் ஒரு பொம்மை ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.
காவல்துறை மிகப்பெரிய ஊழலில் திளைத்துள்ளது. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து அலுவலகங்களாக மாறிவிட்டன. நிலம் சம்பந்தமான பிரச்னையில் போலீசார் லட்சக்கணக்கில் கையூட்டு பெறுகிறார்கள். போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். இதுதொடர்பாக புதிய டிஜிபி நடவடிக்கை எடுக்கிறாரா என்று பார்க்கிறேன். இல்லையென்றால் நானே டிஜிபியை சந்தித்து புகார் அளிப்பேன். இந்த ஆட்சியில் அரசின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. துறைமுகப்பகுதியில் சினிமா எடுக்க தனியாக பணம் வசூலிப்பது என கொள்ளை அடிக்கிறார்கள். இதுதொடர்பாக நகராட்சி, சுற்றுலாத்துறை, துறைமுகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.