நாமக்கல், செப்.7: நாமக்கல் பகுதியில், காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை விபரம் வருமாறு: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (7ம் தேதி) 2 மிமீ, நாளை 5 மிமீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 91.4 டிகிரி, குறைந்தபட்சமாக 68 டிகிரியாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 16 கிமீ வேகத்தில், தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும். மாடு, ஆடுகளில் ரத்த கழிச்சல் நோய் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
குறிப்பாக சுகாதாரமற்ற சூழலில், சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் அடைத்து வளர்க்கப்படும் குட்டிகளில், ரத்த கழிச்சல் நோய் அதிகமாக காணப்படும். முதிர்ந்த ஆடுகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டாலும், நோய் அறிகுறிகளை காட்டாது. ஆனால், சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணியின் உறை முட்டைகளை தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம் இளம் குட்டிகளுக்கு நோய் பரவ காரணமாக இருக்கிறது.எனவே, பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சல்பா மற்றும் ஆம்ரோலியம் மருந்துகளை கொடுக்கலாம். சுகாதாரமான பண்ணை பராமரிப்பு குட்டிகளை, குறைவான எண்ணிக்கையில் பெரிய ஆடுகளில் இருந்து பிரித்து வளர்ப்பதன் மூலம், இந்த நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.