மாமல்லபுரம், ஆக.15: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை இசிஆர் சாலையொட்டி, கடற்கரையில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று மாலை தொடங்குகிறது. அதில், அமைச்சர்கள் பங்கேற்று தொடங்கி வைக்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து, 3வது முறையாக நடத்தும் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று மாலை தொடங்கி 18ம்தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இதில் மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காற்றாடிகளை பறக்க விட உள்ளனர். இந்த காற்றாடி திருவிழாவை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில் இன்று மாலை 3 மணிக்கு அமைச்சர்கள் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதனால், கோவளம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை திருவிடந்தை வரை இயக்க வேண்டும் காற்றாடி ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.