கோவை, நவ. 20: கோவை சூலூர் இடையர்பாளயைம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர், கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் எனது மனைவிக்கு ரூ.9 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள காரை வாங்க பணம் கொடுத்து, முன்பதிவு செய்தேன். பின்னர், ரூ.8 லட்சத்துக்கு வங்கிக்கடன் மற்றும் மீதமுள்ள தொகை ரொக்கமாக வழங்கினேன்.
என்னுடைய மனைவி பெயரில் காரை பதிவுசெய்ய சொல்லி இருந்தேன். காரை ஒரு சில நாட்களில் தருவதாக தெரிவித்தனர். ஆனால், காரை தருவதில் மிகுந்த தாமதம் செய்தனர். எனவே, மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், புகார்தாரரிடம் ரொக்கமாக பெற்ற ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிப்பதுடன், மனஉளைச்சலுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.