வேலூர், ஜூலை 1: வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன்(58), இவர் தனது மகன், பேரன் உட்பட குடும்பத்தினர் 5 பேருடன் சொந்த ஊரில் இருந்து திருப்பதிக்கு காரில் சென்றார். திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று காலை சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, விரிஞ்சிபுரம் காவல் நிலையம் எதிரே நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. காரில் பயணித்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று காரில் இருந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கார் விபத்தில் 5 பேர் காயம் வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில்
0