ஆறுமுகநேரி, நவ. 6: பழையகாயல் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமரி மாவட்டம் புத்தளம், ஒரசவிளையை சேர்ந்த ஜெயபால் மகன் மணிகண்டன்(24). கட்டிட வேலை செய்து வந்தார். வேலை நிமித்தமாக பழையகாயலில் தங்கியிருந்த இவர், உடன் பணியாற்றிய மஞ்சள்நீர்க்காயல் வடக்குத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் முத்துப்பாண்டி(26) என்பவருடன் கடந்த 1ம் தேதி மாலை பைக்கில் முக்காணி ஏடிஎம்மிற்கு சென்று விட்டு பழையகாயலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பைக்கை முத்துப்பாண்டி ஓட்டினார்.
திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் கொடுங்கனி விலக்கு அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார், பைக் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பைக்கில் பின்னால் இருந்த மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். பைக்கை ஓட்டி வந்த முத்துப்பாண்டிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் எஸ்ஐ முரளி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.