கிருஷ்ணகிரி, மே 29: கர்நாடக மாநிலம், பெங்களூரு தொட்டமாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(47), அவரது மனைவி சத்யா (42). இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் ஓசூர் -தர்மபுரி ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். ராயக்கோட்டை கருக்கனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த சதீஷ், சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சீனிவாசனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. விபத்து நடந்ததை பார்த்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயக்கோட்டை, போலீசார் படுகாயமடைந்த சதீஷ், சத்யா ஆகியோரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார். தொடர்ந்து சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.