நன்றி குங்குமம் தோழி கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்ததுபோல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது. ஜூலை 26, 1999ம் ஆண்டு நடைபெற்ற போரில், இந்தியாவின் வெற்றி வரலாற்றுமிக்கது. அந்த போரில் நம் இந்திய விமானப் படை பல சாதனைகள் படைத்திருந்தது. குறுகிய கால பயிற்சியில் 32,000 அடி உயரத்தில் பறந்து, பாகிஸ்தான் வீரர்களின்ஆயுதங்களை எதிர்கொண்டு வெற்றியை தேடித்தந்தனர் நம் இந்திய sவிமானிகளும் பொறியாளர்களும்.இந்தப் போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றிருந்தாலும், நம் போர்வீரர்கள் பலர் உயிரிழந்தும், உயிருக்குப் போராடியும் நாட்டின் எல்லையிலிருந்தனர். அப்போது அந்த வீரர்களையெல்லாம் காப்பாற்றி மீட்கும் பணியில் முதல் முறையாக பெண் வீரர்கள் இருவர் போர்க் களத்திற்கு விமானத்தில் பறந்து சென்று பல பேரின் உயிரைக் காப்பாற்றினர். அவர்கள்தான் இந்தியாவின் முதல் பெண் விமானப் படைவீரர்களான குஞ்சன் சாக்சேனாவும், வித்யா ரஞ்சனும்.கார்கில் போரில் பாகிஸ்தான் படை கண்ணில்பட்ட விமானங்களையும் வீரர்களையும் வீழ்த்திக் கொண்டிருந்த போது, அந்நாட்டு எல்லைக்கு சென்று, உயிருக்குப் போராடிய இந்திய வீரர்களையும், இறந்துபோனவர்களையும் மீட்டு நம் நாட்டிற்கு பத்திரமாகக் கொண்டுவந்துள்ளனர் பைலட் குஞ்சனும், வித்யாவும்.இதில் குஞ்சனின் குடும்பத்தில், அவர் தந்தையும் சகோதரரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். 1990களில் அவர் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போது முதல் முறையாக இந்திய விமானப் படையில் பெண்கள் பயிற்சி விமானிகளாக பணியாற்றும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டது. உடனே அதற்கு விண்ணப்பித்து, முதற்கட்ட தேர்விலும் வெற்றிபெற்று,உடற் தகுதிகளிலும் தேர்வானார்.இந்திய விமானப்படை ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு துறை. அதில் பெண்கள் விமானம் ஓட்ட அனுமதியிருக்கவில்லை. அவர்கள் போரில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்று அஞ்சி, அவர்கள் நேரடியாக விமான வீரர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், குஞ்சனும், அவரின் சக பெண் வீரர்களும் ஒரு வாய்ப்பிற்காக அமைதியாய் காத்துக்கொண்டிருந்தார்கள்.அந்த சமயத்தில் தான் கார்கில் போர் அறிவிக்கப்பட்டது. போர் காலம் என்றாலே பணம் மற்றும் ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். வீரர்கள்எல்லைகளில் போராடிக் கொண்டு இருந்தனர். அதில் உயிரிழப்பு ஏற்படும். மேலும் காயமடைந்தவர்களால் மறுபடியும் போரில் கலந்து கொள்ள முடியாது. ஒரு சில வீரர்கள் மலைகளில் உணவில்லாமல், மருத்துவ உதவியில்லாமலும் தனித்திருந்தனர். அந்த சமயத்தில் குஞ்சனும், வித்யாவும் முன் வந்து, காயமடைந்த வீரர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரும் பொறுப்பையும், அவர்களுக்கு தேவையான பொருட்களை அளிக்கும் பணியையும் ஏற்றனர்.தாம் எப்போது அழைக்கப்படுவோம் என்று காத்திருந்த நம் பெண் விமானிகளுக்கு பறக்கும் நேரம் வந்தது. ஒரு வார கடின பயிற்சிக்குப் பின், குஞ்சன் சாக்சேனா, தன் ஹெலிகாப்டரில் பல ஆயிரம் உயரத்தில் இருக்கும் செங்குத்தான மலைகளுக்கு மேல் பறந்து, கட்டுக்கடங்காத மலைப் பாதைகளில், அடிபட்டிருக்கும் நம் இந்திய வீரர்களை மீட்டு, பாகிஸ்தான் படையினரின் யுக்திகளையும், முக்கிய போர் தகவல்களையும் நம் ராணுவத்திற்கு தெரிவித்தார். அதே சமயத்தில் விமானி வித்யாவும் இந்தியப் படையினரின் வெற்றிக்கு காரணமாக பல தகவல்களை சேகரித்து தெரியப்படுத்தினார்.எந்நேரமானாலும் அவர்கள் விமானம் எதிரிகளால் தகர்க்கப்பட்டு வீழ்த்தப்படலாம் என்ற போதும் தைரியமாய் எதிரி நாட்டினரின் எல்லைக்கே சென்று தங்கள் வீரர்களை மீட்டு வந்துள்ளனர். ‘‘கடும் பருவநிலை மாற்றங்களிலும், புகை மண்டலங்களையும் கடந்து விமானத்தை இயக்குவதில் பல சிக்கல் ஏற்படும். இதில் எதிரிப் படையினர் ஏவுகணைகள், தங்களை நோக்கி ஏவும் போது மேலும் கடினமாகிவிடும்’’ என்று கூறும் இவர்கள், போர் முடிந்ததும், அதீத மன உளைச்சலுக்கு ஆளானாலும், பல வீரர்களைக் காப்பாற்றிய மகிழ்ச்சியே அதிகமிருந்ததாக தெரிவித்துள்ளனர்.பெண்கள் விமானப் படையிலும் பணிபுரியமுடியும் என்று நிரூபித்து, முன்னோடியாக விளங்கும் குஞ்சன், அவர் சந்தித்த சவால்கள் பற்றி விவரிக்கும் போது, ‘‘பெண்களுக்காக தனி கழிப்பறைகளோ, உடை மாற்றும் இடமோ கூட அப்போது கிடையாது. சீருடையை மாற்றிக்கொள்ள, அங்கிருந்த கதவில்லாத ஒரு சிறிய இடத்தில், நானும் வித்யாவும் மாற்றுவோம். யாரும் இல்லாத போது, ஒருவருக்கு மற்றவர் வெளியில் காவலில் இருந்து தான் உடைகளை மாற்றிக் கொள்வோம்.சில நாட்களில், எங்களுக்கு என தனி கழிப்பறை வசதிகளும், உடை மாற்றும் இடமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இப்போது ராணுவத் துறையில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் வசதிகள் 20 வருடங்களுக்கு முன் கிடையாது’’ என்னும் குஞ்சன், ஏழு வருட விமானச் சேவைக்குப் பின், அவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.தற்போது இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி கார்கில் கேர்ள்’ என்ற பாலிவுட் படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கிறார். குஞ்சன் சாக்சேனா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று படத்துறையினர்தெரிவிக்கின்றனர்.ஸ்வேதா கண்ணன்…
கார்கில் பெண்கள்
previous post