சங்ககிரி, நவ.22: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து திருச்சங்கோடு செல்லும் வழியில் சங்ககிரியில் காரை நிறுத்தி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் குறை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து விட்டுச் சென்றார். ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்துறையில் இருந்து கார் மூலம் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வந்த அவருக்கு உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் புகழ் ஆனந்த் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் வருவது குறித்து தகவலறிந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.
அப்போது, சங்ககிரி டிபி ரோடு பகுதியைச் சேர்ந்த தாரணி(25) என்ற மாற்றுத்திறனாளி பெண், தனது தாயார் தனலட்சுமியுடன் கோரிக்கை மனு அளிப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார். அவரை கவனித்த உதயநிதி ஸ்டாலின், அருகில் வரவழைத்து விசாரித்தார். தாரணியிடம் மனுவினை பெற்றுக்கொண்டார். அப்போது, தனது தந்தை தங்கதுரை கூலி வேலை செய்து வருகிறார். தாயார் குடும்பத் தலைவியாக உள்ள நிலையில், ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி ஆகியோர் பள்ளியில் படித்து வருகின்றனர். டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீரியரிங் படித்துள்ள தனக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கி உதவிடுமாறு தாரணி கேட்டுக்கொண்டார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து திருச்செங்கோடுக்கு புறப்பட்டார்.