காரைக்குடி, ஆக. 14: முதல்வர் மு.க.ஸ்டாலின் காரைக்குடி மாநகராட்சியை தொடக்கி வைத்து அதற்கான அரசாணையை வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் ஆகியோருக்கு மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் மேயர் முத்துத்துரை கூறுகையில், காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், நேரு, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் ஆகியோருக்கு மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக அறிவிக்கப்பட்ட 4 மாநகராட்சிகளின் வளர்ச்சிக்கு என முதல்வர் ரூ.1,900 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளார். இந்த நிதியில் நகரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும், என்றார்.