காரைக்குடி, பிப். 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சார்பில் 5ம் நிலைக்கல்வியின் செயல்படுத்தும் கூறுகள் மற்றும் அதன் வழிமுறைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்வியியல் புல முதன்மையர் பேராசிரியர் கலையரசன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி துவக்கிவைத்து பேசுகையில், கல்வி பல்வேறு பரிமாணங்களை அடைந்து வருகிறது. கரும்பலகையில் இருந்து செயற்கை நுண்ணறிவு என்ற பரிமாணத்தை அடைந்துள்ளது. 5.0 கல்வி நிலையில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. மனித மைய கல்வி, பிரச்னைகளுக்கு தீர்வு கானுதல் மற்றும் தொழிற்சாலையுடன் இணைந்து கல்வி போன்று கூறுகளுக்கு முக்கியத்தும் தரப்படுகிறது. தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறோம். தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகவும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. ஆசியாவின் முதல் கல்வியியல் கல்லூரி தமிழ்நாட்டில் 1856ல் தொடங்கப்பட்டது.
அதற்கடுத்தாற்போல் சென்னை வெளியே துவங்கப்பட்ட கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி. தொழிற்கல்வியில் ஸ்கில் இந்தியா என்ற முனைப்பில் மத்திய அரசும், நான் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசும் சிறந்த பங்காற்றி வருகிறது. கல்வியில் 5ம் கட்ட நிலையை சிறப்பாக செயல்படுத்த பாடத்திட்ட புதுமை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆசிரியர்கள் மேம்பாடு, கல்விக் கொள்கைகளை நிர்வகித்தல் மற்றும் உலகம் சார்ந்த கூட்டுறவு மனப்பான்மை முக்கியம் என்றார். மலேசியா க்வெஸ்ட் பன்னாட்டு பல்கலைக்கழக புல தலைவர் ஆஸ்னான் சே அகமது, இந்திய அரசின் தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் முன்னாள் ஆலோசகர் ஹரிஹரன், அபுதாபி ஜவகர்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார்.