காரைக்கால், ஆக.15: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தினமும் பிரேயர் வகுப்பில் மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டன் அறிவுறுத்தினார். நார்கோட்டிக் என்ற அபின், பிரவுன் சுகர், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை காரைக்கால் மாவட்டத்தில் முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமான தொடர் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் மணிகண்டன் பேசியதாவது:
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளின் சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் அமைந்துள்ள கடைகளில் அதிக சோதனைகளில் ஈடுபட வேண்டும். கடல் வழியாக போதைப் பொருட்கள் வருவதை கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருளின் தீமைகள் குறித்து விளக்க வேண்டும். மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் அளிக்கக்கூடாது.
இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் செல்ஃபி ஸ்டாண்ட் அமைத்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காரைக்காலில் அமைந்துள்ள மறுவாழ்வு மையங்களில் சோதனையில் ஈடுபட வேண்டும். அங்கு சிகிச்சை பெறுபவர்களின் சிகிச்சைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காலை பள்ளி துவங்கும் முன் பிரேயர் வகுப்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை தினமும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் மணிகண்டன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் வனத்துறை அதிகாரி விஜி, காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) சுப்பிரமணியன், சமூக நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், புதுவையில் இருந்து போதை தடுப்பு அதிகாரி இந்துமதி, நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.