காரைக்கால், செப்.20: காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம் அமைந்துள்ளது. இங்கு ராகஸ்வரூபம் இந்திய கலை நிகழ்ச்சி குழுமம் சார்பில் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு கிளாசிக்கல் மியூசிக் மாதம் கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் முனைவர் சங்கரநாராயணசாமி, தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் பதிவாளர் முனைவர் சீ.சுந்தரவரதன் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் டீன் (மாணவர் நலன்) முனைவர். நரேந்திரன் ராஜகோபாலன் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கிளாசிக்கல், செமிக்ளாசிக்கல் இசை (குரல்) மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியை கவுரவிக்கும் வகையில் ராகஸ்வரூபம் இந்திய கலை நிகழ்ச்சி கழகத்தை சேர்ந்த மாணவர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல்கள் பாடினர். நிகழ்ச்சியில் கல்லூரியின் இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராகஸ்வரூபம் இந்திய கலை நிகழ்ச்சி குழும ஆலோசகர் முனைவர் வெங்கடேசன் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.