காரைக்கால்,செப்.20: காரைக்கால் மாவட்டத்தில் புதுவை அரசால் அறிவிக்கப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முருகாத்தாளாட்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் கலந்து கொண்டு 90 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாஜீம், மாணவர்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், காரைக்கால் மாவட்டத்தில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகி உங்கள் பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.