காரைக்கால், ஜூலை 7: வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதேபோல் இவ்வாரம் மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன்(தெற்கு), திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மரி கிறிஸ்டியன் பால், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன்குமார், உதவி ஆய்வாளர்கள் குமரன் மற்றும் முருகன், மற்றும் காவலர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 40க்கும் மேற்பட்டோர் தங்களது புகார்களை எழுத்து வடிவமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர். பெறப்பட்ட புகார்களுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என எஸ்எஸ்பி லட்சுமி சௌஜன்யா காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.