காரைக்கால், ஜூன்.3: புதுச்சேரி அரசு, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக காரைக்கால் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள், பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொள்முதல் செய்வது குறித்த விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மீன்வளத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காரைக்கால் மீன்வளத்துறையின் உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, காரைக்கால் மீன்வளத்துறையின் துணை இயக்குநர் கோவிந்தசாமி நிகழ்ச்சியின் நோக்கவுரையை வழங்கினார்.
அவர் தனது உரையில், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி மீன்வளத்துறையின் துணை இயக்குநர்(நலம்) நடராஜன், பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான வழிமுறைகள் மானிய விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்து விரிவாக விளக்கவுரை ஆற்றினார். மீனவ மகளிரின் சந்தேகங்களுக்கும் அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில், காரைக்கால் மீன்வளத்துறையின் கண்காணிப்பாளர் தேவலக்ஷ்மி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினை காரைக்கால் மீன்வளத்துறையின் முதுநிலை கூட்டுறவு ஆய்வாளர் ரத்தினவடிவேலு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 8மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களின் சுமார் 50 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும், நிலையான மீன்பிடி தொழிலில் ஈடுபடவும் இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியாக இருந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.